திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளிக்கு 20 வருடங்களுக்குப் பிறகு வருகிற 29-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்குகிறது. இந்த வழித்தடத்தில் தற்போது 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இந்நிலையில் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையிலான வழித்தடத்தில் ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது முதுநிலை இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார், கோட்ட பொறியாளர் ரவிக்குமார், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார், துணை தலைமை பொறியாளர் வினோத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இவர்கள் அனைவரும் சிறப்பு ரயில் இன்ஜினில் பயணம் மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வருகிற மார்ச் மாதம் 8-ம் தேதி நிரந்தர கேட் கீப்பர்கள் இந்த வழித்தடத்தில் நியமிக்கப்படுவார்கள். அதற்குப் பிறகு கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் திருத்துறைப்பூண்டி வழியாக இயக்குவதற்கு பரிந்துரை செய்யப்படும் என்று கூறினார்.