மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் பசவராஜ் மங்ரூல் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 11ஆம் தேதி அவரது நண்பர் சவுரம் ரினுஸ் என்பவருடன் சேர்ந்து பபி கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பசவராஜின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சவ்ரம் ரினுசுடன் சென்ற பசவராஜ், மற்றொரு நண்பரான ருப்பேசை சந்தித்துள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இருக்கும் மின் கோபுரத்திலிருந்து கேபிள்களை திருட திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி 100 அடி மின் கோபுரத்தில் பசவராஜ் எறியுள்ளார். அதில் உள்ள மின் கேபிள்களை திருட முயன்ற போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மற்ற நண்பர்கள் இருவரும் பசவராஜின் உடலை யாருக்கும் தெரியாமல் அருகில் இருக்கும் வனப்பகுதியில் புதைத்துள்ளனர். பின்பு ஊர் திரும்பியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சவுரம் ரினுஸ் மற்றும் ருப்பேசை கைது செய்தனர். அதன் பிறகு காவல்துறையினர் புதைக்கப்பட்ட பசவராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.