தர்மபுரி மாவட்டம், பப்பரப்பட்டி அருகே உள்ள மேலேந்தப்பட்டியைச் சேர்ந்த விவசாயி வடிவேல். இவர் தனது நிலத்தில் விளைந்த மல்லிகைப் பூக்களை இன்று காலை மின்சார ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு தர்மபுரி மலர் சந்தைக்கு கொண்டு சென்றார். பின்னர், ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பும் போது, தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ராமக்கல் ஏரி அருகே சென்று கொண்டிருக்கும்போதே திடீரென ஸ்கூட்டரில் இருந்து புகை வந்தது.

இதை கண்ட வடிவேல் ஸ்கூட்டரை சாலையோரத்தில் நிறுத்தி இறங்கி பார்த்தபோது ஸ்கூட்டர் தீப்பிடித்தது. சாலையோரத்தில் ஸ்கூட்டரை நிறுத்தியதன் மூலம் வடிவேல் தனது உயிரை காத்துக் கொண்டார். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட போதிலும்,  மின்சார ஸ்கூட்டர் முழுவதுமாக எரிந்து நாசமானது. இது குறித்து தர்மபுரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.