பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன,.11) அஜித் நடித்த “துணிவு”, விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இதற்கென சென்ற 2 நாட்களாக தமிழகம் முழுவதும் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆன பின் 2 ரசிகர் மன்றத்தினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, அதனால் சினிமா தியேட்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் வாரிசு, துணிவு ஆகிய 2 படங்களுமே திரையிடப்பட்டுள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு திரைப்படம் திரையிடப்பட்டபோது தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள், அங்கு இருந்த விஜய்யின் வாரிசு பட பேனர்களை கிழித்தனர். அதேபோன்று 4 மணிக்கு வாரிசு திரைப்படம் பார்க்க வந்த தளபதி ரசிகர்கள் பதிலுக்கு அஜித் பேனரை கிழித்தெறிந்ததால் இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதன்பின் இருதரப்பு ரசிகர்களும் அடிதடியில் இறங்கியதால் அந்த இடமே போர்க்களம் போன்று காட்சியளித்தது. அதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் தடியடி நடத்தி இருதரப்பு ரசிகர்களையும் விரட்டியடித்தனர்.