தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு x பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தமிழ்நாட்டில் கொலை மற்றும் கொள்ளை போன்ற பல்வேறு விதமான சட்ட ஒழுங்கு சீர்கேடுகளால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடும் நிலையில், ஆசிரியர்கள், மருத்துவர்கள், நெசவாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் தெருவில் இறங்கி போராடும் நிலை தான் உள்ளது.
எனக்கு குற்றச்சாட்டு வைப்பதே வேலையாக போய்விட்டது என்று மு.க ஸ்டாலின் கூறும் நிலையில் இந்த விடியா திமுக அரசின் அவல நிலையை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சி தலைவராகிய என்னுடைய கடமை.
அதற்கு முறையாக நடவடிக்கை எடுத்து செயல்படுத்துவது அரசின் கடமை. அதை செய்யாமல் எந்த ஒரு திறமையும் இல்லாமல் ஒரு முதலமைச்சரிடம் இப்படிப்பட்ட மடைமாற்று பதிலை தான் எதிர்பார்க்க முடியும். திமுகவிடம் நாகரிகம் மற்றும் மக்கள் மீதான அக்கறையை எதிர்பார்க்க முடியாது. இதற்கு ஸ்டாலினின் சமீபத்திய தரக்குறைவான பேச்சுக்களே சான்றாகும்.
நிர்வாக திறன் அற்ற முதல்வர் ஸ்டாலின் முடிந்தால் மக்கள் பணி செய்யட்டும் இல்லை எனில் நிர்வாக திறமை இல்லை என்று அறிவிக்கட்டும். ஆட்சி இருக்கிறது என்ற ஆணவச் செருக்கில் நீங்கள் பேசும் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய குற்றச்சாட்டுகளை நாங்கள் பெரிதாக மதிப்பதில்லை அதையெல்லாம் கண்டு கொள்வது கிடையாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.