கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் பலரும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இன்று கள்ளக்குறிச்சிக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்த்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் வேதனையை அளிக்கும் நிலையில் எங்களுக்கு தெரிந்த தகவலின் படி ஆளும் கட்சியினர் இந்த விவகாரத்துக்கு பின்னால் இருக்கிறார்கள்.

இல்லையெனில் இத்தனை துணிச்சலாக காவல் நிலையத்திற்கு அருகிலேயே கள்ளச்சாராய விற்பனை நடைபெறுமா.? இன்னும் எத்தனை பேர் சிகிச்சை பெறுபவர்களில் குணமடைவார்கள் என்பது தெரியவில்லை. கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும் மருந்து தமிழ்நாட்டில் எந்த மருத்துவமனையிலும் கிடையாது. இதுவரை திமுக அரசு எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். தகவல் கிடைத்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம் என அமைச்சர் கூறுகிறார். நாங்கள் இது தொடர்பாகவே முன்னதாகவே தகவல் கொடுத்தோம். இருப்பினும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த விவகாரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தில் போதைப்பொருள் ஆறாக ஓடுகிறது என்று கூறினார்.