தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின்போது அவர் திமுக மற்றும் பாஜகவை விமர்சித்து பேசிய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்படும் என்றும் விஜய் அரசியல் களத்திற்கு வர வேண்டும் எனவும் 2026 ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி கண்டிப்பாக தமிழகத்தில் நடக்கும் என்றும் கூறினார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசும் பொருளாக மாறிய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் இது தொடர்பாக திமுக கட்சியின் அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார். அவர் பேசியதாவது, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின்போது அம்பேத்கரைப் பற்றி பேசாமல் அரசியல் பேசியுள்ளனர். மன்னராட்சி மற்றும் வாரிசு பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. தமிழ்நாட்டை வழி நடத்தும் முதல்வராக கண்டிப்பாக துணை முதல்வர் உதயநிதி எதிர்காலத்தில் இருப்பார். உதயநிதி நடித்த படங்களில் கொள்கை என்பது இருந்தது. ஆனால் விஜய் நடித்த எந்த படங்களிலும் கொள்கை என்பது கிடையாது என்று கூறினார். மேலும் முன்னதாக அமைச்சர் நாசர் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம் என்று கூறிய நிலையில் உதயநிதி ஸ்டாலினின் படங்கள் கொள்கை படங்கள் என்று தற்போது அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.