ஆளுநர் ஆர்.என் ரவி கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு கல்வி, கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பல் என அனைத்திலும் சிறந்து விளங்கும் நிலையில் பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாகவும் திகழ்கிறது. தமிழகத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர் தங்கள் மகள்களை படிக்க அனுப்பும்போது பாதுகாப்பாக உணர்கிறார்கள். இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் பெண்கள் படிக்க வருகிறார்கள். இதே போன்று பாதுகாப்பான சூழல் டெல்லியில் கூட இல்லை. டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக கருதும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை பாதுகாப்பான மாநிலமாக கருதுகிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்களில் அரசியல் காரணமாக ஜாதிய சண்டைகள் அதிகமாக நடைபெறுகிறது. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து ரவி தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்துதான் வருகிறார். தமிழக அரசுக்கும்  ஆளுநருக்கும்  இடையே மோதல் போக்கு என்பது  நீடிக்கும் நிலையில் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்று வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டை பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று ஆளுநர் ரவி கூறியது கவனத்தை ஈர்த்துள்ளது.