தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் தற்போது சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசுக்கும் திமுக அரசுக்கும் விஜய் கண்டனங்களை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அதன்படி ஜாதிவாரி கணக்கெடுப்பை பிற மாநிலங்கள் நடத்தும் போது மத்திய அரசை காரணம் காட்டி திமுக அரசு அதனை நடத்தாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. அதன் பிறகு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக திமுக அரசு பொய் வாக்குறுதிகளை அளித்ததாக விஜய் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

குறிப்பாக மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்வதாக தேர்தல் வாக்குறுதி அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்து 3 வருடங்களாகியும் இன்னும் அந்தத் திட்டத்தை செயல்படுத்தவில்லை என்று கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் பிறகு மின்சார கட்டணம் உயர்வு, பால் கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவைகளுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் பிறகு படிப்படியாக மது கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக நீதியின் பாதையில் திமுக அரசு பயணிப்பதாக கூறுவதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். மேலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரின் நன்மைக்காக மட்டுமே செயல்படுவதாக அவர் கடுமையாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.