தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி தொடங்க உள்ள நிலையில் வழக்கமாக கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும். அதேசமயம் புதிதாக உருவாகியுள்ள காலி பணியிடங்களுக்கான ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுவார்கள்.

ஆனால் இந்த வருடம் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டதால் தற்போது ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு தொடக்க கல்வித்துறையின் கீழ் 424 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், 1111 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 1777 இடைநிலை ஆசிரியர்கள் என்று மொத்தமாக 3312 பேர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அரசு பள்ளிகளில் மொத்தம் 3312 காலி பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை ஆசிரியர்கள் தற்காலிகமான முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.