தமிழகத்தில் அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வருடம் தோறும் அண்ணா பல்கலைக்கழகம் இந்த தேர்வினை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு வருகிற மார்ச் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. காலையில் எம்.சி.ஏ படிப்புக்கும் மதியம் எம்.பி.ஏ படிப்புக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனிடையே எம்ப்ளான், எம் ஆர்க், எம்டெக், எம் இ போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும் கடந்த வருடங்களில் டான்செட் தகுதி தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
ஆனால் நிகழாண்டில் அதனை மாற்றி எம் இ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியுள்ளது. அதற்கு பொது பொறியியல் நுழைவு தேர்வு மாணவர் சேர்க்கை என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் சீட்டா எனப்படும் இந்த சி.இ.டி.ஏ தேர்வு வருகிற மார்ச் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. புதன்கிழமை முதல் இந்த இரண்டு தேர்வுகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. இதில் தேர்வு எழுதிக் கொள்ள விரும்பும் பட்டதாரிகள் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி வரை www.tancet.annauniv.edu என்னும் இணையதளம் வழியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள், ஹால் டிக்கெட் வெளியீடு, தேர்வு கட்டணம் உட்பட கூடுதல் தகவல்களை மேலே கூறப்பட்டுள்ள இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.