ஜீவனாம்சம் கோரும் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014 -ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த ஒரு தம்பதி அவர்களது மகனிடம் இருந்து பராமரிப்பு தொகை கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தாய்- தந்தைக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.20,000 வழங்க குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அந்த தம்பதியின் மகன் உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பராமரிப்பு தொகை மற்றும் ஜீவனாம்சம் கோரும் வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையில் 2014 -ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருவதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பராமரிப்புத்தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை உடனடியாக குடும்ப நல நீதிமன்றங்கள் விசாரித்து முடிக்க வேண்டும். இடைக்கால உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை மூன்று மாதத்திற்குள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். அதேபோல் கால அவகாசம் நீட்டிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.