
சென்னையை சேர்ந்த கௌதமன் உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 5-வது வழித்தடத்தில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக 800 வருடங்கள் பழமை வாய்ந்த சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ராஜகோபுரம் மற்றும் கொடிமரம் அமைந்துள்ள பகுதிகளில் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் 15 அடி நிலத்தை கையகப்படுத்தும் விதமாக திட்டத்தை அமைத்துள்ளார்கள். மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படும் போது பழமை வாய்ந்த கோவில்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி கொடுத்துள்ளது.
ஆனால் தற்போது சட்ட விதிகள் மற்றும் ஆகம விதிகளை பின்பற்றாமல் கோவில் நிலத்தில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும்போது கோவிலுக்கு எவ்வித பாதிப்பு வராது எனவும், கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது எனவும் அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது. அதோடு விருகம்பாக்கம் கோவிலுக்கு அருகே அமையும் மெட்ரோ ரயில் பாதை வேறு பாதையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. மேலும் இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.