வங்காள தேசத்தில் ஏற்பட்ட மாணவர் புரட்சி காரணமாகத் தனது பிரதமர் பதவியை இழந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனா, வரும் டிசம்பர் மாதம் மீண்டும் தனது தாய்நாட்டிற்குத் திரும்ப அதிரடியாகத் திட்டமிட்டுள்ளார்.

அவர் மீது சுமத்தப்பட்ட போராட்ட அடக்குமுறை குற்றச்சாட்டுகளுக்காக, அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஏற்கனவே மரண தண்டனை விதித்துள்ளதுடன், அவரது அவாமி லீக் கட்சியையும் தற்போதைய அரசு தடை செய்துள்ளது.

இந்தச் சூழலில், முகமது யூனுஸ் மற்றும் தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசுகள் அவரைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி வந்த நிலையில், ஹசீனா தற்பொழுது தன்னிச்சையாகவே நீதிமன்றத்தில் சரணடைய இந்த முடிவை எடுத்துள்ளார். தனது கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து அவர் வங்கதேசம் திரும்பவுள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள ஷேக் ஹசீனா, தான் நாடு திரும்பும்போது தற்போதைய அரசு தன்மீது பழிவாங்கும் நடவடிக்கையாகக் கைது செய்யவோ அல்லது கொலை செய்யவோ கூடும் என்பதை நன்கு அறிவதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், தனது அவாமி லீக் கட்சியின் தொண்டர்கள் தாயகத்தில் கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்து வருவதால், அவர்களுக்காகத் தான் நேரில் சென்றே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

ஒருவேளை தனக்கு மரணமே நேரிட்டாலும், அது தனது பெற்றோரின் ரத்தம் சிந்தப்பட்ட, அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட சொந்த மண்ணிலேயே நிகழ வேண்டும் என்று அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியுள்ளார்.

நீதிமன்ற மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து, சட்டரீதியாக எதிர்கொள்ளத் துணிந்துள்ள ஹசீனாவின் இந்த திடீர் அறிவிப்பு வங்கதேச அரசியலில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.