
மத்திய பிரதேசம் ஜபல்பூர் எல்லை அருகே உள்ள கட்னி மாவட்டத்தின் சாப்ரா கிராமம், தேசிய நெடுஞ்சாலையில், ஜபல்பூரிலிருந்து ஹசாரிபாக் நோக்கி மதுபானங்களுடன் சென்ற ஒரு லாரி, எருமையைக் காப்பாற்ற முயன்ற போது கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநரும், கிளீனரும் காயமடைந்தனர். கவிழ்ந்த லாரியில் இருந்த ஏராளமான பீர் மற்றும் மதுபான பாட்டில்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. அப்போது பொதுமக்கள் காயமடைந்த ஓட்டுநருக்கும், கிளீனருக்கும் உதவி செய்யாமல் அவர்களை காப்பாற்றுவதற்குப் பதிலாக, பீர் பாட்டில்களை கொள்ளையடிக்க தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
People Rush To Loot Beer Bottles As Loaded Truck Overturns In MP’s Jabalpur #people #Jabalpur #BearBottles #loot #MadhyaPradesh pic.twitter.com/EUoJkaEtER
— Free Press Madhya Pradesh (@FreePressMP) May 19, 2025
இது தொடர்பான வீடியோ , சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் மக்கள் பீர் பாட்டில்களையும் பெட்டிகளையும் கைப்பற்றி பைகளில் அடைத்து, தோளில் சுமந்து ஓடுகிற காட்சிகள் பதிவாகியுள்ளன. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், சலிம்நாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அகிலேஷ் தஹியா தலைமையில் போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள் விரைந்து வந்து மீதமுள்ள பாட்டில்களை பாதுகாப்பதில் ஈடுபட்டனர். இருப்பினும், பெரும்பாலான பாட்டில்கள் ஏற்கனவே பொதுமக்களால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இது மக்கள் மத்தியில் சட்டம் மற்றும் ஒழுக்கத்தின் மீதான விழிப்புணர்வின்மையை சுட்டிக்காட்டுகிறது.
மதுபான ஒப்பந்ததாரர், இந்த விபத்தால் லட்சக்கணக்கான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, வைரலான வீடியோவில் காணப்படும் நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.