ஆந்திர மாநிலம் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. ஜனசேனா கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாண் “எதிர்க் கட்சிகள் ஓட்டு 2024 தேர்தலில் பிளவுபடாமல் இருப்பதை உறுதி செய்வேன்” என ஏற்கனவே சூளுரைத்திருக்கிறபோது, இந்த கேள்வி வலுப்பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி உடன் ஜனசேனா கட்சி கூட்டணி சேருமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை, பவன்கல்யாண் சந்தித்த சூழ்நிலையில், ஜனநாயகத்தை காப்பதற்காக அனைத்து எதிர்க் கட்சிகள் உடனும் இணைந்து செயல்படப்போவதாக இருவரும் கூட்டாக அறிவித்தனர். இது அங்கு கூட்டணி மாற்றம் ஏற்படுமா எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.