கோவையில் இருதய அறுவை சிகிச்சை சங்கத்தின் 69 -ஆவது வருடாந்திர கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இந்த மருத்துவ கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து 1,200க்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் அறுவை சிகிச்சையில் உள்ள புதுமைகளை எடுத்துரைப்பதற்கும் இருதய அறுவை சிகிச்சை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் தளமாகவும் இந்த கருத்தரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கின் முக்கிய உரையை உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைவர் விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் வழங்கியுள்ளார். அப்போது “பெருந்தொற்றை நாம் கையாண்டதும் அதன் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களும்” என்னும் தலைப்பில் அவர் பேசியுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பின் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம்  முதலிடத்தில் இருக்கிறது. அதே போல் இருதய மாற்று அறுவை சிகிச்சை உட்பட பல மாற்று அறுவை சிகிச்சைகளில் தமிழகம் தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்தில் இருக்கிறது.

புற்றுநோய் சிகிச்சையில் மிக சிறப்பாக பங்களித்து வரும் ஜப்பான் நாட்டிற்கு சென்று அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் உட்பட உயர் அதிகாரிகளின் உதவியுடன் நேரடியாக அந்த சிகிச்சை முறைகளையும் பார்த்து வந்திருக்கின்றோம். அதேபோல் அந்த நாட்டில் செயல்படுத்தி வரும் health walking என்ற திட்டம் மாரடைப்பை குறைக்க அவசியம் என்னும் அடிப்படையில் தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் health walking திட்டத்தை கொண்டு வர முதல்வரிடம் கோரிக்கை வைத்து செயல்படுத்த இருக்கின்றோம். ஆனால் கொரோனாவுக்கு பின் மாரடைப்பு நோய் அதிகரித்து வருகிறது. இதனால் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என இருதய சிகிச்சை நிபுணர்களுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இளைஞர்களிடையே உடற்பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாள்தோறும் நான் ஓடி வருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.