உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா சீனாவின் ஊகான் மாகாணத்தில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதி கால த்தில் வெளியுலகத்திற்கு பரவியது. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று உலகம் முழுவதையும் பாடாய் படுத்தி விட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் தரை, வான், ரயில் போக்குவரத்து முடங்கியது.

இதனால் உலக நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்த கொரோனா தொற்று சீனாவின் ஊகான் ஆய்வகத்தில் இருந்தே தோற்றுவிக்கப்பட்டது என உலக நாடுகள் சீனாவை குற்றம் சாட்டியது. ஆனால் சீனா அதற்கு மறுப்பு தெரிவித்தது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் இருந்து தங்களது நேரடி விசாரணையை தொடங்கியது. ஆனால் இதுவரையிலும் இந்த விசாரணை ஓயவில்லை. இந்த நிலையில் “கொரோனா தொற்று எப்படி தோன்றியது? என்பதை கண்டறியும் பணியை உலக சுகாதார அமைப்பு நிறுத்திவிட்டது. சீனா ஒத்துழைப்பு தராததால் இந்த தேடுதல் கைவிடப்பட்டது” என பிரபல வலைதளத்தில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் உலக சுகாதாரம் அமைப்பின் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது “கொரோனா பெருந்தொற்று தோன்றியது எப்படி? என்ற பதில் கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். இதனை கண்டறிவதன் மூலம் வருங்காலத்தில் வரும் பெரும் தொற்றுகளை தவிர்ப்பது எப்படி? என கண்டறிய முடியும்” என்று கூறியுள்ளார்.