ஆஸ்திரேலியா நாட்டில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் தினசரி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது அந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அதேபோல் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் தினசரி கொரோனா தொற்றின் எண்ணிக்கை 2000 ஆக பதிவாகியுள்ளது என அந்நாட்டில் சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த ஆண்டு நீண்டகால கொரோனா பற்றிய செணட் விசாரணை குழுவை அந்நாட்டின் சுகாதார மந்திரி மார்க் பட்லர் அமைத்துள்ளார். இந்த விசாரணையின் முடிவுகளை அந்நாட்டின் மருத்துவ அதிகாரியான பால் கெல்லியின் தலைமையிலான குழு நாளை விளக்கம் அளிக்க இருக்கின்றது. இந்த நிலையில் பால் கெல்லி தங்களுடைய விசாரணை குழுவின் முன் இன்று கூறியதாவது “கடந்த 14 மாதங்களாக எண்ணற்ற கொரோனா அலைகள் நம் நாட்டை பாதிப்புக்குள்ளாக்கியது. சமீபத்தில் ஏற்பட்ட அலையின் தாக்கம் குறைவாக இருந்த போதிலும் மக்கள் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.

வருங்காலத்தில் அதிக அலை வரலாம். இந்த ஆண்டில் குறைந்தது இரண்டு அலைகளாவது வரும். அதனால் நாம் அதற்கு மிகவும் தயாராக இருக்க வேண்டும். கடந்த காலங்களை திரும்பிப் பார்ப்பது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். அதன் மூலம் நாம் வருங்காலத்திற்கான பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். கொரோனா மட்டுமின்றி வேறு நோய்களைப் பற்றியும் இந்த தருணத்தில் நாம் அறிந்து கொள்ளலாம். அதனால் எதிர்காலத்தில் வரக்கூடிய நோய்களை சமாளிப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.