நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அடுத்துள்ள பட்டண முனியப்பபாளையம் பகுதியில் வசித்து வருபவர் அஜித் குமார்(27). இவருக்கு ராதா(24)என்ற மனைவி உள்ளார். அஜித் குமார்- ராதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக ராதா அவரது அம்மா வீடான அய்யம்பாளையத்தில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் குழந்தைகளை பார்க்க அஜித்குமார் மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வழக்கம்போல கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ராதா, அஜித் குமார் கண்களில் மிளகு பொடியை தூவி கொதிக்க கொதிக்க எண்ணெயை அஜித்குமாரின் முகத்தில் ஊற்றியுள்ளார். இதனால் வலி தாங்காமல் அலறிதுடித்த அஜித் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று ராதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் முகத்தில் மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.