குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் வெள்ளலூர் காவல் நிலையத்தில் இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலை நீர்நிலைத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஏற்கனவே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக 85 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாகவும், இதில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த 36 பேரிடம் பிற சமூகத்தை சேர்ந்த 49 சாட்சிகளிடம் மொத்தம் 85 சாட்சிகள் மூலம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி நேர்மையாகவும், ஒளிவுமறைவின்றி முழு முயற்சியுடன் வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளது.