முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வு கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வே. இறையன்பு இ.ஆ.ப உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, சென்னை பெருநகர காவல் ஆணைய சங்கர் ஜீவால், காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, காவல்துறையின் சிறப்பான, திறமையான, பாரபட்சமற்ற, துரிதமான பணியே மக்களிடம் காவல்துறைக்கும் அரசுக்கும் நல்ல பெயரை தரும். சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும் எந்த சக்திகளையும் எந்த காரணத்திற்காகவும் அனுமதிக்க கூடாது.
மேலும் எந்தவிதமான தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்கும் அதே சமயத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட மாநகரத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் மாநகர காவல் ஆணையர் முழு கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் புகார் அளிக்க வரும் ஏழை, எளிய மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் நடவடிக்கை கோரி அணுகும் போது அவர்களிடம் மனிதநேயத்தோடு அணுகி அவர்களது புகாரினை பதிவு செய்ய வேண்டும். மேலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அணுகு முறையின் மூலமாகத்தான் காவல்துறையை மக்களுக்கு நண்பன் ஆக்கும் என கூறியுள்ளார். மக்களின் நம்பிக்கைக்கு முழுமையாக நீங்கள் பாத்திரம் ஆக வேண்டும். காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும். காவல்துறை தலைவர் இதனை உறுதி செய்து தர வேண்டும். இதைத்தான் நான் மட்டுமல்லாமல் மக்களும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றார்கள். அதனால் இதை நீங்கள் செய்ய வேண்டும் செய்வீர்கள் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது என கூறியுள்ளார்.