பெங்களூருவில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தம்பதியினர், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலிக்கு தங்களின் இருப்பிடத்தை மாற்றி, அங்கிருந்தபடியே ‘ரிமோட் வொர்க்’ வீட்டிலிருந்தே வேலை செய்யத் தொடங்கினர்.

மேலும் அவ்வாறு மாறிய பிறகு, அவர்கள் திட்டமிடாமலேயே தற்செயலாக தங்களுக்கு மாதத்திற்கு ₹30,000 வரை பணம் சேமிப்பாக மிஞ்சுவதை உணர்ந்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். பெங்களூருவில் ₹45,000 ஆக இருந்த இவர்களது வீட்டு வாடகை, மணாலியில் ₹28,000 ஆகக் குறைந்து, வாடகையில் மட்டுமே ₹17,000 சேமிக்கப்பட்டுள்ளது.

“>

மேலும், அலுவலகத்திற்குப் பயணம் செய்யத் தேவையில்லாததால் ₹3,000, காபி மற்றும் தின்பண்டங்கள் வாங்குவது குறைந்ததால் ₹2,500 மற்றும் அலுவலக ரீதியான இரவு உணவுகள் இல்லாததால் ₹5,000 எனப் பல்வேறு வழிகளில் இவர்களது பணம் மிச்சமாகியுள்ளது.

இதனால் இவை அனைத்தையும் விட முக்கியமாக, பெங்களூரு போன்ற பெருநகர வாழ்க்கையின் இறுக்கமான பணிச்சுமையிலிருந்து விடுபட வார இறுதி நாட்களில் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள செலவிட்டு வந்த ₹5,000 முதல் ₹6,000 வரையிலான பெரும் தொகை மணாலியில் முற்றிலும் குறைந்துள்ளது.

அதோடு பணத்தைச் சேமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் மணாலிக்குச் செல்லவில்லை என்றும், தங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவே அங்கு சென்றதாகவும், இந்தச் சேமிப்பு தங்களுக்குக் கிடைத்த கூடுதல் போனஸ் என்றும் அஞ்சலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது இந்த அனுபவப் பகிர்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் நிரந்தரமாக வீட்டிலிருந்தே வேலை தரும் நிறுவனங்கள் மற்றும் மணாலியில் உள்ள ஹோம்ஸ்டே வசதிகள் குறித்து ஆர்வத்துடன் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.