மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டத்தில் ரோகித் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்ற இளம் பெண்ணை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அங்குள்ள தொழிற்பேட்டையில் வேலை செய்து வந்துள்ளனர். இதனிடையே ஆர்த்தி நடத்தையில் ரோகித்துக்கு சந்தேகம் எழுந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் ஆர்த்தி நேற்று காலை 8.30 மணி அளவில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

சாலையில் நடந்து சென்ற போது அங்கு மறைந்திருந்த ரோகித் தான் மறைத்துக் கொண்டு வந்த ஸ்பேனரை கொண்டு பின்னாலிருந்து வேகமாக வந்து ஆர்த்தியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்து சுருண்டு விழுந்த ஆர்த்தியை ஆத்திரம் அடங்காத ரோகித் 18 முறை தலையில் அடித்துள்ளார். இந்த கொடூர தாக்குதலில் ஆர்த்தி ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். இந்த கொடூர கொலையை சுற்றி நின்ற மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.