திருமண நாளில் பளிச்சென்று அழகாகக் காட்சிளிக்க வேண்டும் என்பது அனைத்து மணப்பெண்களின் கனவாகும். ஆனால், இதற்காகக் கடைசி நேரத்தில் புதிய ஃபேஷியல்கள், கெமிக்கல் பீல், லேசர் சிகிச்சைகள் அல்லது கெராட்டின் போன்ற ஹேர் ட்ரீட்மென்ட்களை முயற்சி செய்வது சருமத்திற்கும் கூந்தலுக்கும் தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று தோல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒவ்வொருவரின் சரும அமைப்பும் மாறுபட்டது என்பதால், கடைசி நேரத்தில் செய்யப்படும் புதிய சிகிச்சைகள் திடீரென அலர்ஜி, சிவத்தல், அதிக வறட்சி அல்லது முகப்பருக்களை உருவாக்க வாய்ப்புள்ளது. அதேபோல், புதிய ஹேர் கலரிங் மற்றும் சிகிச்சைகள் முடி உதிர்தல் அல்லது உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தி, திருமணப் புகைப்படங்களின் அழகைக் கெடுத்துவிடும்.
கெமிக்கல் பீல் மற்றும் லேசர் போன்ற தீவிர சிகிச்சைகளுக்குப் பிறகு சருமம் இயல்பு நிலைக்குத் திரும்பச் சில நாட்கள் முதல் வாரங்கள் வரை தேவைப்படும். இதுமட்டுமின்றி, திருமண நேரத்து மனஅழுத்தம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் சருமம் ஏற்கனவே உணர்திறன் கொண்டதாக இருக்கும் சூழலில், புதிய சிகிச்சைகள் பக்கவிளைவுகளின் தீவிரத்தை அதிகப்படுத்திவிடும்.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அழகு ட்ரெண்டுகளைக் கண்மூடித்தனமாக நம்பிப் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவருக்குப் பலன் தரும் சிகிச்சை மற்றவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி (AAD) மற்றும் பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எனவே, புதிய சிகிச்சைகளைச் செய்ய விரும்பினால் திருமணத்திற்கு 2 முதல் 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிடுவது நல்லது. கடைசி வாரங்களில் சருமத்திற்குப் பழகிய எளிய பராமரிப்புகள், போதுமான தூக்கம், அதிக தண்ணீர் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவதே பாதுகாப்பான மற்றும் இயற்கையான பொலிவைத் தரும்.
