திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ரகுநாதபுரத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான சிவன் ராஜ்(34) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவன்ராஜ் ரம்மி விளையாட்டில் சிறு சிறு தொகையை வென்று வந்துள்ளார். இந்நிலையில் பெரிய தொகையை வைத்து விளையாடிய சிவன்ராஜ் மொத்த தொகையும் இழந்துவிட்டார். இதனையடுத்து இழந்த தொகையை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் கடன் வாங்கி சிவன்ராஜ் ஆன்லைனில் ரம்மி விளையாடியதாக கூறப்படுகிறது.
அதன் பிறகும் தோல்வியுற்று சிவன்ராஜ் 15 லட்ச ரூபாய் பணத்தை இழந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிவன்ராஜ் குளிர்பானத்தில் பூச்சி மருந்து வாங்கி கலந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சிவன்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.