சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் துறைகளில் நடைபெற்ற அனைத்து டெண்டர்கள் மற்றும் பணிகளின் உண்மை நிலவரத்தை விளக்கும் வெள்ளை அறிக்கை கூடிய விரைவில் வெளியிடப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

​ஏற்கனவே இந்த ஆட்சியில் நிதித்துறை மற்றும் மின்சாரத் துறை ஆகியவற்றின் நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்த வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறையிலும் வெள்ளை அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. பேரவையில் உரையாற்றிய அமைச்சர், கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற டெண்டர்களில் என்னென்ன நடந்தது என்பதை ஆதாரத்துடன் மக்களுக்கு வெளிப்படையாகச் சொல்லப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

​இதனிடையே, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேறு எந்தெந்தத் துறைகளுக்கு வெள்ளை அறிக்கை தரலாம் என்ற விவாதமும் எழுந்துள்ளது. முக்கியமாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிதி நஷ்டம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் குறித்து அறிய போக்குவரத்துத் துறையிலும், அரசு மருத்துவமனைகளின் மருந்துப் கொள்முதல் மற்றும் உள்கட்டமைப்பு விவரங்களை அறிய சுகாதாரத் துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

​மேலும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மேற்கொாள்ளப்பட்ட குடிநீர் மற்றும் சாலைப் பணிகளின் நிதி ஒதுக்கீடுகளை ஆய்வு செய்ய உள்ளாட்சித் துறையிலும், ஆசிரியர் நியமனம் மற்றும் பள்ளிகளின் கட்டமைப்பு நிதியைப் புரிந்துகொள்ளக் கல்வித் துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியமாகிறது. பொதுமக்களின் வரிப்பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதில் தெளிவைக் கொண்டுவர, இதுபோன்ற முக்கியத் துறைகளிலும் உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.