கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாராவி பகுதியில் சுனில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபஜா என்ற மனைவி உள்ளார். சுபஜா தற்போது அரசு பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் சுபஜா செம்பிலாவிளை பகுதியில் இருந்து அரசு பேருந்தில் தனது சொந்த ஊரான திக்கணங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் திக்கணங்கோடு பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் சுபஜா கீழ இறங்கி தான் கொண்டு வந்த பையை திறந்து பார்த்தார். அப்போது 21 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ஒரு ஆட்டோவில் ஏறி தான் வந்த பேருந்தை பின் தொடர்ந்து சென்று மத்திக்கோடு பகுதியில் வைத்து பேருந்தை வழி மறைத்தார்.
அதன் பிறகு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தான் கொண்டு வந்த பணம் திருடு போனது பற்றி தெரிவித்துள்ளார். மேலும் பேருந்தில் இருக்கும் அனைத்து பயணிகளையும் சோதனை செய்ய காவல் நிலையத்திற்கு பேருந்தை ஓட்டி செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அப்போது பேருந்தில் இருந்த ஒரு பெண் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார். உடனே சக பயணிகள் அந்த பெண்ணை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் சோதனை செய்தபோது பணம் எதுவும் இல்லை.
ஆனால் அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் 21 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த பெண் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட பெண் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சமீர் வியாஸ் நகரில் வசிக்கும் பரமசிவத்தின் மனைவி கருப்பாயி(40) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கருப்பாயியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.