தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் தற்போது சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜய் கலந்து கொண்டு 26 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்று அறிவிப்பும் அதனை சட்டம் ஆக்குதலும் ஜனநாயகத்திற்கு எதிரான ‌ நடவடிக்கை. மக்களாட்சி தத்துவத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ள மத்திய பாஜக அரசின் இந்த திட்டத்தை தமிழக வெற்றி கழகம் கண்டிப்பதாகவும் உடனடியாக இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோன்று நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு அந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார். ஒருவேளை இதில் சிக்கல் இருக்கிறது என்றால் அதற்கு இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி அதில் ஒரு சிறப்பு பொதுப்பட்டியல் என்பதை உருவாக்கி கல்வியை அதில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். மேலும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.