மதுரை அண்ணா நகரை சேர்ந்த நவீன் ராஜ் என்ற 27 வயது இளைஞர், இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். இதனை தெரிந்து கொண்ட நவீன் ராஜ் சென்னைக்கு வந்த நிலையில் அவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டார். தினம்தோறும் தான் காதலித்த பெண் தங்கி இருந்த விடுதிக்கு முன்பு அவருடைய கண் அசைவுக்காக காத்திருந்த அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

இதனால் ஒரு கட்டத்தில் வெறுப்படைந்த நவீன் ராஜ் அந்த இளம் பெண்ணை பழிவாங்க நினைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் புகைப்படத்தையும் அவரது சகோதரியின் புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் இருந்து எடுத்து அதனை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்டு தனது கோபத்தை தீர்த்துக் கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் உடனே போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து நவீன் ராஜை கைது செய்த போலீசார் ஆபாச படங்களை சித்தரிக்க உதவிய அவருடைய நண்பர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ருத்திர மணிகண்டன் என்பவரையும் கைது செய்துள்ளனர்.