மகாராஷ்டிரா மாநிலம், தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள சத்திரபதி சம்பாஜி நகரில் உள்ள ஒரு புடவை கடைக்கு நுகர்வோர் நீதிமன்றம் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு பெண் ஆர்டர் செய்த இரண்டு புடவைகளில் ஒன்றை கொடுக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாராஷிவ் மாவட்ட நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்தது. ஆணையத்தின் தலைவர் கிஷோர் வாட்னே மற்றும் உறுப்பினர் வைஷாலி போரடே ஆகியோர் கடந்த ஜூலை 15-ஆம் தேதி இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

வழக்கின் விவரப்படி, ஸ்வாதி காஸ்துரே என்ற பெண் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தாராஷிவ்-ல் உள்ள மைதிரி புடவை கடையில் இரண்டு புடவைகளுக்கு ஆர்டர் கொடுத்தார். மொத்த தொகை 6,300 ரூபாயில் 3,000 ரூபாய் முன்பணம் கொடுத்தார். புடவைகள் வரும் ஜனவரி 25-ஆம் தேதி கிடைக்கும் என கடை உரிமையாளர் கூறியிருந்தார். ஆனால், அன்று ஒரு புடவை மட்டுமே கொடுக்கப்பட்டது. பின்னர், பிப்ரவரி 1-ஆம் தேதி இரண்டாவது புடவையை கொடுப்பதாக கடை உரிமையாளர் உறுதியளித்தார். ஆனால், தொடர்ந்து கேட்டும் புடவையை கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், கடை உரிமையாளர் அதை வாங்க மறுத்தார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார். ஆனால், கடை உரிமையாளர் நீதிமன்ற விசாரணைக்கு வரவில்லை. இதையடுத்து, நீதிமன்றம் கடை உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. மேலும், 15 நாட்களுக்குள் இரண்டாவது புடவையை தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.