தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், திருப்பூர் வீரபாண்டி பிரிவு ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றிய வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அவர் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். ஆய்வின் பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர், “திருப்பூர் மாவட்டத்தில் ஆவின் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 40 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள பால் கோவை மாவட்டத்திற்கு அனுப்பப்படுகிறது. மேலும், 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் தரத்தை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில் கோவையில் பன்னீர் பேக்டரி அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்கு உதவுகிறது. அதற்காக பால் விலையை ரூ.40க்கு வழங்கி வருகிறோம். தி.மு.க. அரசு ஏழை மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,” என அவர் கூறினார். அவர் உடன் செல்வராஜ் எம்.எல்.ஏ, மேயர் தினேஷ்குமார், மற்றும் கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.