தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். ஆனால் ஏகே 62 திரைப்படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியதாக சமீப காலமாகவே தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
அதாவது ஏகே 62 திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் சொன்ன கதை நடிகர் அஜித்துக்கு திருப்தி அளிக்காததால் மீகாமன், தடையறத் தாக்க மற்றும் கழகத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி ஏகே 62 திரைப்படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏகே62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் விதமாக தற்போது தன்னுடைய டுவிட்டர் முகப்பில் வைத்திருந்த அஜித்தின் புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கியுள்ளார்.
அதோடு #AK 62 என்ற பதிவையும் விக்னேஷ் சிவன் நீக்கியுள்ளார். அதற்கு பதில் ஒரு மோட்டிவேஷனல் வாசகத்தை தன்னுடைய twitter-ல் முகப்பில் விக்னேஷ் சிவன் வைத்துள்ளார். இதன் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து விலகியதை மறைமுகமாக தெரியப்படுத்திவிட்டார் என்று நெட்டிசன்கள் பலரும் கூறி வருகிறார்கள். மேலும் அஜித்தின் தீவிர ரசிகரான விக்னேஷ் சிவனுக்கு அவரின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், தற்போது படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் அவர் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.