தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஒவ்வொரு வருடமும் வரும் புயல் மற்றும் பேரிடரின் போது வருடாந்திர சம்பிரதாய நிகழ்வாக ஓரிரு நாட்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை ஆட்சியாளர்கள் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவிட்டு, தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தான் தீர்வா? அந்த நேரத்துக்கான தீர்வைத் தந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் மக்கள் துன்பத்தை ஒருநாள் சம்பிரதாயம் போல நினைத்து அன்றோடு மறந்துவிடுவதும் எந்த வகையில் நியாயம்?

மழை வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களில் மக்களுக்கான அடிப்படைப் பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தார்மீகமான தலையாய கடமை, முதலில் ஆட்சியாளர்களுக்கே இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள் இதை முழுவதுமாகவே மறந்துவிடுகின்றனர்.

மக்களைப் பாதுகாப்பாக இருக்க வைப்பதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது குறித்து அவர்கள் எள்ளளவும் சிந்திப்பதில்லை. காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்ப் பாதுகாப்புச் சார்ந்து எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை. வெறும் தற்காலிகக் கண்துடைப்பு அறிவிப்புகளைச் செய்வதில் மட்டுமே முனைப்புடன் இருக்கின்றனர். இவ்வாறு செய்வதையே ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டிருப்பது உண்மையிலேயே வேதனையைத் தருகிறது.