கிருஷ்ணகிரி ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் பகுதியில் இன்று (பிப்,.2) எருதுவிடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டனர். ஆனால் இப்போட்டிக்கு முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி காவல்துறையினர் அனைவரையும் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து திடீரென ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். இதனை தடுத்ததால் போலீசார் மீது இளைஞர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை என தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தவறான தகவல் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்