இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா, தற்போது இந்திய அணியுடன் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
முதல் போட்டியில் 59 ரன்களும், இரண்டாவது போட்டியில் 43 ரன்களும் குவித்து அவர் அசத்தியுள்ளார். மைதானத்தில் பேட்டிங்கில் மிரட்டி வரும் அவர், மைதானத்திற்கு வெளியே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் காரணமாகப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
சமூக வலைதளங்களில் அவரது முகம் மற்றும் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தனது தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கவும், இந்த மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அபிஷேக் சர்மா தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனது அனுமதியின்றி தனது பெயர், புகைப்படம் அல்லது குரலை ஏஐ சார்ந்த உள்ளடக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும், தனது புகைப்படங்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான இணையதள ஆதாரங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதி சிங், ஆன்லைன் உலகில் தனிநபர் உரிமைகள் மற்றும் அவதூறு தொடர்பான விவகாரங்களில் பல குழப்பங்கள் நீடிப்பதாகக் குறிப்பிட்டார்.
தற்போது உடனடியாக எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படாத நிலையில், ஆதாரமாக இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அபிஷேக் சர்மாவின் வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் போது சமூக ஊடக நிறுவனமான ‘மெட்டா’ தரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
