சென்னையில் நேற்று நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்படும் என்றும் இனி ஒருவர் பிறப்பால் முதலமைச்சர் ஆக முடியாது என்றும் திமுக அரசை சாடி பேசினார். இதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். அதாவது தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது எனவும் மன்னராட்சி நடைபெறவில்லை எனவும் அவருக்கு அறிவு கிடையாதா என்று கூறினார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆக இனி ஆக முடியாது என ஆதவ் அர்ஜுனா கூறியது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் நின்று ஜெயித்தவர். அப்படி இருக்கும்போது அவரை எப்படி பிறப்பால் முதல்வரானார் என்று கூற முடியும். தேர்தல் மூலம் மக்களை சந்தித்து வருபவர்களை பிறப்பால் வந்தவர்கள் என்று கூற முடியாது. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று சொல்வது இயல்பான ஒரு விஷயம்தான். இதனை ஆணவம் என்று கூற முடியாது. நான் திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம் என்று கூறினார். மேலும் இதே போன்று அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.