தமிழக ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பொங்கல் விழா ராஜ்பவனில் வருகிற 12-ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த பொங்கல் விழாவில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக ஆளுநர் ரவி சார்பாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு தமிழக அரசின் இலச்சினையையும் அழைப்பிதழில் ஆளுநர் பயன்படுத்தவில்லை.

கடந்த முறை நடைபெற்ற தேநீர் பார்ட்டியில் அழைப்பு விடுத்த போது தமிழ்நாடு ஆளுநர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது அரசியல் அரங்கில் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆளுநர் ரவி தமிழ்நாடு, திராவிடம், அண்ணா, பெரியார், அம்பேத்கர், தமிழ்நாடு அமைதி பூங்கா போன்ற பல வார்த்தைகளை தவிர்த்து விட்டார். இதனால் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் பேசிக் கொண்டிருக்கும் போதே எழுந்து ஆளுநரின் உரையை  உடனடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முன்மொழிந்தார்.

அதன்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் அவையை விட்டு வெளியேறினார். மேலும் வழக்கமாக சபாநாயகர் அவை முடிந்து விட்டது என்று கூறி தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட பிறகு தான் ஆளுநர் வெளியேற வேண்டும். ஆனால் ஆளுநர் அதற்கு முன்பாகவே வெளியேறி சபையின் மரபை மீறியதாக ஏற்கனவே கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு என்ற வார்த்தையையும் தமிழ்நாடு அரசின் இலச்சினையையும் அழைப்பிதழில் பயன்படுத்தாமல் இருப்பது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.