
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த 14-ஆம் தேதி கட்டட்டி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாதேவப்பா(65) என்பவர் தனது நண்பர்களுடன் விறகு வெட்டுவதற்காக காட்டிற்குள் சென்றார். இந்த நிலையில் பசுவேஸ்வரர் கோவில் பகுதிக்கு சென்ற மாதேவப்பா மதியம் வரை திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் அவரை தேடி சென்றனர்.
அங்கு பலத்த காயங்களுடன் மாதேவப்பா இறந்து கிடந்ததை பார்த்த நண்பர்கள் போலீசாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி வனத்துறையினர் வந்து பார்த்தபோது யானை மிதித்ததால் மாதேவப்பா உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.