இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்கள் இண்டேன், ஹெச்பி, பாரத் கேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தி வருகின்றன. போலி இணைப்புகளை நீக்கி, தகுதியான பயனாளிகளுக்கு அரசு வழங்கும் மானியம் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, வாடிக்கையாளர்கள் அனைவரும் இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்திற்கு கேஸ் உருளை இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களது e-KYC சரிபார்ப்பு பணியை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கெடு முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கேஒய்சி செய்யத் தவறினால் அடுத்த மாதம் முதல் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக, பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு வழக்கம் போலக் கிடைக்கும் ரூ.300 மானியம், கேஒய்சி நிறைவு செய்யப்படாவிட்டால் நின்றுபோகக் கூடும். எனவே, வாடிக்கையாளர்கள் உடனடியாகத் தங்களது கேஸ் ஏஜென்சியைத் தொடர்பு கொண்டு, தங்களுக்குக் கேஒய்சி நிலுவையில் உள்ளதா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி நிறுவனங்கள் இதற்காகச் சிறப்புச் செயலிகளை வைத்துள்ளன. இதில் வாடிக்கையாளர் எண், பதிவு செய்யப்பட்ட கைபேசி எண், அடையாளச் சான்று மற்றும் முக அடையாளச் சரிபார்ப்பு மூலம் ஆன்லைனிலேயே மிக எளிதாக இ-கேஒய்சி செய்து கொள்ளலாம்.

ஆன்லைனில் செய்ய இயலாதவர்கள், தங்களது அடையாள அட்டைகள் மற்றும் கேஸ் புத்தகத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிக்குச் சென்று இந்தச் சரிபார்ப்பைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலிலும், இணையதளச் சிக்கல்களிலும் மாட்டுவதைத் தவிர்க்க உடனே இந்த வேலையை முடிப்பது நல்லது.