டெல்லியில் ராபிடோ ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணியிடம், ஓட்டுநர் ஒருவர் செல்போனில் ஆபாசப் படங்களைப் பார்த்துக்கொண்டு பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
அதாவது டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8:48 மணியளவில் ராபிடோ (செயலி மூலம் ஆட்டோ ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். பயணத்தின் போது, போக்குவரத்து சிக்னல் ஒன்றில் ஆட்டோ நின்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் திடீரென இவரைத் தொடர்பு கொண்டு, ஆட்டோ ஓட்டுநர் தனது மொபைல் போனில் ஆபாசக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார். அந்த பெண் ஓட்டுநரின் கவனத்தை ஈர்க்க முயன்றபோது, ஆட்டோ ஓட்டுநர் தனது செல்போனை உடனடியாக மறைத்துள்ளார்
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்த அந்தப் பெண் பயணி, ஓட்டுநர் மிகவும் ஆவேசமாக மூச்சு விடுவதையும், ஆட்டோவை ஓட்டிக்கொண்டே தவறான முறையில் தன் உடலைத் தொட்டுக்கொண்டிருப்பதையும் உணர்ந்து அதிர்ந்துபோயுள்ளார். அப்போது இலக்கை அடைய இன்னும் சுமார் 30 நிமிடங்கள் தேவைப்பட்ட நிலையில், பாதைகள் பெரும்பாலும் நெடுஞ்சாலைகளாக இருந்ததாலும், தனியாகப் பயணம் செய்வதாலும் உடனடியாக ஆட்டோவைவிட்டு இறங்கவோ அல்லது ஓட்டுநரிடம் சண்டையிடவோ அவர் முற்படவில்லை. மாறாக, பெரும் அச்சத்துடன் ஆபத்தான சூழலைத் தவிர்க்கத் திட்டமிட்டுள்ளார்.
பயணத்தின் நடுவிலேயே ராபிடோ நிறுவனத்தின் பாதுகாப்புத் குழுவைத் தொடர்புகொண்டு, ஓட்டுநர் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டு செல்வதாகவும், தான் பாதுகாப்பற்ற உணர்வதாகவும் அவசரச் செய்தி அனுப்பியுள்ளார். இலக்கை அடைந்ததும் ஓட்டுநரைச் சந்தித்துத் தைரியமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். தான் செய்த செயலை மறுக்காத ஓட்டுநர் சோத்துலால் குமார் யாதவ் தான் தவறாக ஒன்றும் செய்யவில்லை என்றும், “வெளிநாட்டினர் குறுகிய ஆடைகள் அணிந்திருக்கும் வீடியோக்களைத்தான் பார்த்தேன்” என்றும் சாதாரணமாகக் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்து பல மணி நேரங்கள் கடந்தும் ராபிடோ நிறுவனத்திடமிருந்து தகுந்த பின்தொடர்தல் அழைப்போ அல்லது விளக்கமோ தனக்கு வரவில்லை என அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனைத் தெரிவித்துள்ளார். மேலும், ஆபத்தான சூழலிலிருந்து தன்னை எச்சரித்த அடையாளம் தெரியாத அந்தப் பெண் இருசக்கர வாகன ஓட்டிக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.
தனது பாதுகாப்பிற்காகப் பயணம் முழுவதும் தொடர்ந்து இடர் மதிப்பீடு செய்ததாகக் குறிப்பிட்ட அவர், பெண்கள் ஏன் உடனடியாகப் பாதுகாப்பற்ற இடங்களை விட்டு வெளியேறுவதில்லை என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு இதுவே பதிலாகும் என்றும் விளக்கினார். தற்போது இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து காவல்துறை தரப்பிலோ அல்லது ராபிடோ நிறுவன தரப்பிலோ இதுவரை அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகள் அல்லது அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
