நாடே கோலாகலமாக சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நேற்று (ஆகஸ்ட் 15), இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதியில் வழக்கம் போல தேசிய கொடி இறக்கும் கோலாகலமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், உயர் அதிகாரிகளும் திரண்டிருந்த அந்தப் பகுதியில் தேசப்பக்திப் பாடல்கள் முழங்கிக் கொண்டிருந்தன.
ஆனால், அங்கு திடீரென்று ஒலிபரப்பப்பட்ட ஒரு பாடல்தான் தற்போது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அது வேறொன்றுமில்லை, தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ பிரச்சாரப் பாடலான ‘தனி ஒருவன் எழுந்து வாரான்’ என்ற வரிகளுடன் கூடிய கட்சிப் பாடல்தான் அது. எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கு நடுவே, சுமார் 14 வினாடிகள் இந்தத் தவெக பாடல் அங்கு ஒலிபரப்பப்பட்டுள்ளது.
அதன்பிறகு அந்தப் பாடல் உடனடியாக நிறுத்தப்பட்டாலும், அதனுடன் சேர்த்து நடிகர் விஷாலின் ‘மருது’ படப் பாடலும் ஒலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கட்சித் தொடங்கப்பட்ட சில காலங்களிலேயே அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ள விஜய் தரப்புப் பாடல்கள், நாட்டின் முக்கிய எல்லையான வாகா வரை எதிரொலித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் வியப்பையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
