அமெரிக்காவை சேர்ந்த உடற்பயிற்சியாளர் ஆஷ்டன் ஹால், சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது  உடலை பராமரிப்பதில் தீவிரமாக இருக்கும் இவர், தனது காலை நேர அழகு பராமரிப்பு பழக்கத்தை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அவர் முதலில் ஐஸ் கட்டியுடன் நிரப்பிய கண்ணாடி கோப்பையில் முகத்தை மூழ்கடித்து, பின்னர் வாழைப்பழத் தோலை முகத்தில் தேய்த்து, பின்னர் முகத்தை கழுவுகிறார். இது முகத்திற்கு பளபளப்பாக்குவதோடு , தோலை மிருதுவாக்குவதாகவும் அவர் விளக்குகிறார்.

இந்த வீடியோ எக்ஸ்  வலைதளத்தில் வெளியான சில நாட்களிலேயே 71 கோடியே 20 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலானது. சமூக வலைத்தளத்தில் ஆஷ்டன் ஹால்-ஐ 30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள், மேலும் உடற்பயிற்சி கருவிகள் இல்லாமல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் முறைகளை வீடியோக்களில் பகிர்வது அவரின் தனித்துவமான அம்சமாகும். வாழைப்பழத் தோலை பயன்படுத்தும் இந்த எளிய முக பராமரிப்பு வழிமுறை, உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்களில் பெரும் ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் கிளப்பியுள்ளது.