கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சனேரி பகுதியில் வசித்து வருபவர் ஒரு இளம்பெண் (32). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்று வருகிறார். இந்த நிலையில் பேராசிரியர் தனது தனிப்பட்ட தேவைக்காக கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூபாய் 12 லட்சம் கைபேசி செயலின் மூலம் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட தேதியில் பணத்தை திருப்பி கொடுக்காததால் நிறுவனத்தின் ஊழியர்கள் பேராசிரியரை பலமுறை தொடர்பு கொண்டுள்ளனர். இருப்பினும் பேராசிரியர் பணத்தை திரும்பி கொடுக்கவில்லை.

எனவே அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பேராசிரியரின் புகைப்படத்தை தகாத முறையில் மார்ஃபிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் தனது கல்லூரியில் சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வந்த திருப்பூர் மாவட்டம் உடுமலை ப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (31) என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இவர் ஒரு மென் பொறியாளர். பேராசிரியர் தனக்கு நிகழ்ந்த சம்பவத்தை அரவிந்திடம் கூறி சமூக வலைதளத்தில் தனது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அகற்றி விட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதற்கு பணம் செலவாகும் எனக் கூறிய பொறியாளர் அரவிந்த் பேராசிரியரிடம் இருந்து ரூபாய் 13 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் சமூக வலைதளங்களில் இருந்து பேராசிரியர் புகைப்படத்தை நீக்கவில்லை. இதனால் பேராசிரியர் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அரவிந்த் கொடுக்க மறுத்ததால் கோயம்புத்தூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல்துறையில் பேராசிரியர் புகார் அளித்துள்ளார். இந்த  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பொறியாளர் ஆன அரவிந்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது  தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.