தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “நான் மரியாதையுடன் பார்க்கக் கூடிய தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி எல்லைகளை கடந்து எனக்கு எம்.ஜி.ஆர் மீது தனிப்பட்ட மிகுந்த மரியாதை உள்ளது. காமராஜர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர் விரிவுபடுத்தியுள்ளார். மேலும் குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றி இன்று பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அந்த காலத்திலேயே குழந்தைகளுக்கு சத்துருண்டையை கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அதே போல் மாணவர்களுக்கு படிப்புடன் சத்துணவு கொடுத்தார். சிறந்த ஆட்சியாளராக இருந்துள்ளார். எங்களது திருமணத்தை நடத்தி வைத்தவர். அந்த நன்றி உணர்வோடு இன்று எம்.ஜி.ஆர் -க்கு அஞ்சலி செலுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்கள் அ.தி.மு.க துண்டு துண்டாக இருக்கிறது. ஆளுநராக உங்களின் கருத்து என்ன? என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு பதில் அளித்து பேசிய தமிழிசை சௌந்திரராஜன் ஆளுநராக இருப்பதற்கு பதில் கூற முடியாது. கட்சித் தலைவராக இருந்தால் தான் பதில் கூற முடியும். எம்.ஜி.ஆர் நல்ல கனவோடு கட்சி நடத்தி வந்தார். அனைவருக்கும் ஒற்றுமையாக இருந்து பணியாற்றுவது சிறப்பாக இருக்கும் என்பது தமிழகத்தில் ஒருவராக என்னுடைய தனிப்பட்ட கருத்து என கூறியுள்ளார். இதனையடுத்து எம்.ஜி.ஆர் தேச தலைவரா? அல்லது திராவிட தலைவரா? என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு எம்.ஜி.ஆர் தேசியம் போற்றிய திராவிட தலைவர் என ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பதில் அளித்துள்ளார்.