அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கோவையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக விவசாயிகள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை புறக்கணித்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடத்தியது சரியல்ல எனவும் எங்களை வளர்த்து விட்டதே எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தான் என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதற்கு தற்போது அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்தது விவசாயிகள் சங்கம் தான். அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்கான பாராட்டு விழாவை அவர்கள்தான் நடத்தினார்கள். அதில் அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்பதற்காக தான் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை அவர்கள் வைக்கவில்லை. மேலும் விவசாயிகள் நடத்திய பாராட்டு விழா கூட்டமைப்பில் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் இருந்ததால் அரசியல் வேண்டாம் என்பதற்காக ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்களை தவிர்த்துள்ளனர் என்று கூறினார்.