மும்பையிலுள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பாந்த்ரா பகுதியில் ரிலையன்ஸ் குழுமத்தின் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு நேற்று மாலை 4:30 மணி அளவில் வந்த அழைப்பில் பள்ளிக்கு வெடி குண்டு வைக்கப்பட்டதாக மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. உடனே பள்ளித் தரப்பில் இருந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் சோதனை செய்யப்பட்டது.

அதன்பின் வெடி குண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். சென்ற அக்டோபர் மாதம் ரிலையன்ஸ் மருத்துவமனையை வெடி குண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும், அம்பானி குடும்பத்தினரை கொலை செய்யப் போவதாகவும் தொலைப்பேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.