இந்திய ரயில்வேயின் புதிய அடையாளமாக உருவெடுத்துள்ள ‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலில் முதன்முறையாகப் பயணம் செய்த பிரிட்டிஷ் டிராவல் வ்லாகர், அதன் வேகம், உபசரிப்பு மற்றும் நவீன வசதிகளை வியந்து பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பிரிட்டனைச் சேர்ந்த பிரபல டிராவல் வ்லாகரான ராரி போர்ட்டர் தனது காதலியுடன் இந்தியாவுக்குச் சுற்றுலா வந்துள்ளார். இந்தியா வருவதற்கு முன்பு வரை, இங்கு பழைய மாடல் டீசல் இன்ஜின்களும், மக்கள் தொங்கிக் கொண்டு செல்லும் கூட்ட நெரிசலான ரயில்களும் மட்டுமே இருக்கும் என்று அவர் நினைத்திருந்தார்.
View this post on Instagram
ஆனால், டெல்லியிலிருந்து பஞ்சாபின் பாட்டியாலா நகருக்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பிறகு, இந்திய ரயில்வே மீதான அவரது ஒட்டுமொத்த பார்வையும் தலைகீழாக மாறியுள்ளது. “இந்தியாவில் அதிவேக ரயில்களே இல்லை என்று என்னிடம் கூறினார்கள், ஆனால் இது இந்தியாவின் முதல் செமி ஹை-ஸ்பீடு ரயில்” என்று தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் ராரி போர்ட்டர் ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளார்.
ரயிலில் ஏறும் போது கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும், சீட்டில் அமர்ந்த சில நிமிடங்களிலேயே ஏசி குளிர்ச்சி தங்களை இதமாக்கியதாக அந்த ஜோடி தெரிவித்துள்ளது. பயணத்தின் போது அவர்களுக்கு சுடச்சுட சமோசா, பழச்சாறு, விதவிதமான ஸ்நாக்ஸ் மற்றும் இந்திய பாரம்பரிய மசாலா சாய் ஆகியவை பரிமாறப்பட்டுள்ளன. கூடுதல் கட்டணம் செலுத்தினால் பிரத்யேக காபி வசதியும் அதில் இருந்தது அவர்களைக் கவர்ந்துள்ளது. ஜன்னல் வழியே தெரிந்த பஞ்சாபின் பசுமையான வயல்வெளிகளை ரசித்தபடி சென்ற ராரிக்கு, ஒரு சுவாரசிய அதிர்ச்சியும் காத்துக்கொண்டிருந்தது.
ரயிலில் அதிக டீ மற்றும் காபி குடித்ததால், அவர் கழிவறைக்குச் சென்றபோது தற்செயலாக இந்திய பாணி டாய்லெட்டுக்குள் நுழைந்துவிட்டார். மேற்கத்திய பாணி டாய்லெட்டுகளும் அங்கு இருந்தபோதிலும், தவறுதலாக இந்திய பாணியை தேர்ந்தெடுத்த அவர், ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் பின்னர் எந்த சிரமமும் இன்றி அதைப் பயன்படுத்தியதாக நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வ்லாகர் முதலில் காட்டிய கூட்ட நெரிசல் ரயில் படம் இந்தியாவுடையது அல்ல, அது பங்களாதேஷில் எடுக்கப்பட்டது என்றும், இந்திய தண்டவாளங்கள் இப்போது 100% மின்மயமாக்கப்பட்டு நவீனமாகிவிட்டன என்றும் இந்திய நெட்டிசன்கள் கமெண்ட்டுகளில் பெருமையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
