கொல்கத்தாவை சேர்ந்த ஜஸ்பிர் கவுர் என்பவர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். இவருக்கு 58 வயது ஆகிறது. ஜஸ்பிர் கவுர் கடந்த 22 ஆண்டுகளாக தான் படித்த அதே பள்ளியிலேயே ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பள்ளி நிர்வாகத்துக்கும் ஜஸ்பிர் கவுருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கின்றனர். ஜஸ்பிர் கவுர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் பேஸ்புக் லைவில் இருக்கும்போதே ஜஸ்பிர் கவுர் தனது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் கூறியதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் பள்ளியின் புதிய நிர்வாக குழு, உறுப்பினர்கள், முதல்வரின் முறைகேடுகள், ஊழலுக்கு எதிராக நான் குரல் கொடுத்தேன். ஆனால் யாரும் கேட்கவில்லை. அவர்கள் என்னை துன்புறுத்தவும் தனிமைபடுத்தவும் முயற்சி செய்தனர். நான் ஓய்வு பெறுவதற்கு 1 1/2 ஆண்டுகள் உள்ளது. ஆனால் என் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முயற்சி செய்கின்றனர். எனக்கு வேறு வழி தெரியவில்லை என கூறி தற்கொலை செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.