மத்தியப் பிரதேசம், குவாலியர் பகுதியின் சைதன்யா டெக்னோ பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவருக்கு இரு கைகளிலும், காலிலும் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டதுடன், மார்பில் பலத்த உள் காயங்களும் ஏற்பட்டுள்ளன. மாணவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.

மூன்றாவது மாடியில் இருந்த மாணவர் கீழே விழுந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், மாணவர் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் தள்ளினார்களா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், மாணவரின் வகுப்பு இரண்டாவது மாடியில் இருந்ததையும், அவரை மூன்றாவது மாடிக்கு அழைத்துச் சென்றது யார்? என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.

மாணவனின் தந்தை கூறியதாவது, சம்பவம் நடந்ததற்கு முன்பு பள்ளி முதல்வர் மாணவர் வகுப்பில் மயங்கி விழுந்ததாக கூறியதாகவும், இது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.